Connect with us

இலங்கை

அன்றைய தமிழ்-முஸ்லிம் தலைமைகள் இன ரீதியான தேசியவாதத்தை விரும்பவில்லை.

Published

on

அன்று சேர் பொன். இராமநாதன், எம்.சித்திலெப்பை, ரி.பி.ஜாயா, சேர் பொன். அருணாசலம் ஆகியோர் இன்றைய தலைவர்களை போல்  சிந்தித்து இருந்தால் இலங்கை இன ரீதியான பிழவுபட்ட நாடாக என்றைக்கோ உருவாகி இருக்கும் என்பது திண்ணம் ஆகும் என்று அரசியல் புரட்சிகர முன்னணியின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி எம். சி. ஆதம்பாவா தெரிவித்தார்.

 மாளிகைக்காடு மேற்கு ஷேய்கா அப்துல்லாஹ் அல் – ஸயிர்  அரபு கல்லூரியில் 73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு  நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்றவர்களை பாராட்டி கொளரவிக்கும் நிகழ்வில்
 தலைமை தாங்கி உரையாற்றிய போது இதனை தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றுகையில்,

தமிழ், முஸ்லிம், சிங்கள தலைவர்களின் காத்திரமான கூட்டு பங்களிப்பு மூலமாகவேதான் அன்னியர்களிடம் இருந்து எமது நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்தது. ஆனால் அந்த சுதந்திரத்தை இந்த நாட்டின் எல்லா இன மக்களும் அனுபவிக்க முடிகின்றதா? என்கிற கேள்வி 73 ஆவது சுதந்திர தினமான இன்றும் கண் முன் நிற்கின்றது.

அன்னியர்களிடம் இருந்து நாம் விடுதலை பெற்று விட்டோம் என்பது உண்மைதான். ஆனால் எமது ஜனாஸாக்களை எம்மால் எமது சமய முறைப்படி நல்லடக்கம் செய்ய முடியாமல் இருக்கின்றது என்பது சிந்திக்க வேண்டிய விடயமாகவே உள்ளது.

அதே போல எல்லா சமயங்களையும் சமமாக நடத்தப்படுகின்றனவா? என்று பார்த்தால் அரசியலமைப்பு ஊடாக பௌத்த சமயத்துக்கு ஏனைய சமயங்களை காட்டிலும் முதலிடம் வழங்கப்பட்டு உறுதி செய்யப்பட்டு உள்ளது என்பதையும் எண்ணி பார்க்க வேண்டி உள்ளது.

ஒரே நாடு ஒரே சட்டம் என்கிற கொள்கை திட்டம் அனைவருக்கும் பொதுவானதாக பாரபட்சம் இன்றி அமுல்படுத்தப்படுகின்றதா? என்கிற வலுவான சந்தேகம் நின்று நிலைக்கின்றது. மத்திய மலை நாடு, வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஒரே விதத்தில் சமமாக நடத்தப்படுகின்றனவா? என்று கேட்க வேண்டி இருக்கின்றது.

பிள்ளையானுக்கு ஒரு நீதி, ரஞ்சன் ராமநாயக்கவுக்கு இன்னொரு நீதியா? என்று மக்கள் வினவுகின்றார்கள். உயிர் இழந்த உறவுகளை நினைவுகின்ற உரிமை ஏன் தமிழர்களுக்கு மறுக்கப்படுகின்றது? யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டு இருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபியை அண்மையில் இடித்தார்கள். தெற்கில் இவ்வாறான நினைவு தூபிகள் ஏராளமாக இருக்கின்றன. பாராளுமன்றத்தில் பண்டாரநாயக்க போன்றவர்களுக்கு நினைவு தூபி இருக்கின்றது.

எது எப்படி இருந்தாலும் தமிழர்கள், முஸ்லிம்கள், சிங்களவர்கள் என்று இனங்களாக நாம் பிரிந்து நிற்கவே கூடாது. ஒரே தேசியமாக இலங்கையர்களாக இருத்தல் வேண்டும். தமிழ் தேசியம், முஸ்லிம் தேசியம், சிங்கள தேசியம் போன்ற கோஷங்கள் அர்த்தம் அற்ற இனவாத துவேசங்கள் ஆகும் என்று தெரிவித்தார்.