Connect with us

கட்டுரை

ஆதிவாசிகளின் வாழ்க்கை வரலாறு தொகுப்பு

Published

on

நடேசன் குகதர்சன்

ஆதிவாசிகள் குடும்பம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் மதுரங்கேணிக்குளம் கிராம அதிகாரி பிரிவிலுள்ள குஞ்சங்கல்குளம் பகுதியில் மாத்திரம் 74 ஆதிவாசிகள் குடும்பம் வாழ்ந்து வருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் குஞ்சங்கல்குளம், மதுரங்கேணிக்குளம், கிரிமிச்சை, கொக்குவில், மாங்கேணி, காயான்கேணி, வட்டவான், ஆலங்குளம், நாசிவந்தீவு, குகனேசபுரம், பனிச்சங்கேணி, கண்டலடி, தட்டுமுனை, பால்சேனை, அம்பந்தாவெளி, திக்கான, கட்டுமுறிவு, ஆண்டான்குளம் ஆகிய பகுதிகளில் ஆதிவாசிகள் வாழ்ந்து வருகின்றனர்.

இங்கு வாழும் ஆதிவாசி மக்கள் தங்களுடைய ஜீவனோபாய தொழிலாக விவசாயம், வீட்டுத் தோட்டம், தேன் எடுத்தல், மீன் பிடித்தல், கால்நடை வளர்ப்பு போன்ற தொழிலை செய்து வருகின்றனர்.

இங்குள்ள பிள்ளைகள் தங்களுடைய கல்வியை மதுரங்கேணிக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கற்று வருகின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்திற்கான ஆதிவாசிகள் சங்கத்தின் தலைவரான நல்லதம்பி வேலாயுதம் குஞ்சங்கல்குளம் பகுதியில் வசித்து வருகின்றார். இவரின் கீழ் கிழக்கு மாகாணத்தில் ஆதிவாசிகள் பல்வேறு கிராமங்களில் வாழ்ந்து வருகின்றனர்.

இவர்கள் காலை எழுந்து தங்களுடைய இயற்கை தெய்வமான வேடுவ தெய்வத்தினை வழிபட்டு அதன் பிற்பாடு தங்களது ஜீவனோபாய தொழிலான விவசாயம், தோட்டம் செய்கை, தேன் எடுத்தல், மீன் பிடித்தல் போன்ற தொழிலை செய்து வருகின்றது.

அத்தோடு தங்களது உறவுகளுடன் இணைந்து தமது சந்ததிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் தமது இனத்தின் மாற்றங்கள் தொடர்பில் கலந்துரையாடல்களை வழமையாக மேற்கொண்டு வருகின்றனர். அதன்பிற்பாடு தங்கள் பகுதிகளுக்குட்பட்ட வனங்களுக்கு சென்று தேன் எடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடுபவர். குறிப்பாக மழை காலம் தவிர்ந்த காலங்களில் தேன் எடுப்பது வழக்கம்.

தேன் எடுப்பதற்காக காடுகளில் செல்லும் போது தான் சென்ற வழி மறக்காமல் இருப்பதற்காக மரங்களில் சிறிய கிளைகளை உடைத்து வழியில் போட்டு செல்வதாகவும் நேர் வழியில் செல்லும் போது இலைகள் நேராக தெரியும் படியும் அதில் இருந்து இடது பக்கம் அல்லது வலது பக்கம் திரும்பும் போது அந்தப் பக்கமாக போட்டு செல்வோம்;.

செல்லும் போது தான் சென்ற வழி மறக்காமல் இருப்பதற்காக மரங்களில் சிறிய கிளைகளை உடைத்து வழியில் போட்டு செல்வதாகவும் நேர் வழியில் செல்லும் போது இலைகள் நேராக தெரியும் படியும் அதில் இருந்து இடது பக்கம் அல்லது வலது பக்கம் திரும்பும் போது அந்தப் பக்கமாக போட்டு செல்வோம் என்றும், காடுகளிற்குள் நுழையும் போது மிருங்களிடம் இருந்து எங்களை உயிர்களை பாதுகாத்துக் கொள்வதற்கு சத்தம் (கூச்சலிட்டு) செல்வோம் என்றும் தெரிவித்தனர்.

தேன் எடுக்க செல்லும் போது காட்டில் தாகம் ஏற்படும் பட்சத்தில் நீர் கிடைக்காத பகுதியாக இருந்தால் அப்பகுதியில் தண்ணீர் கொடி என்ற ஒரு தாவரம் இருக்கும் அக்கொடியை வெட்டி அதன் மூலம் கிடைக்கும் நீரை பருகுவதாக தெரிவித்தனர்.

இந்த தண்ணீர் கொடியில் ஒரு அற்புதம் என்னவென்றால் கொடியாக உள்ள மரத்தில் ஒரு பகுதியை வெட்டினால் நீர் வராது அதில் ஒரு அடி அல்லது இரண்டு அடி மட்டில் ஒரு மரத்துண்டை மரத்தில் இருந்து அகற்றி அதனை தலைகீழாக பிடித்தால் அதில் இருந்து நீர் சொற்றுச் சொற்றாக ஊற்றும் அதிலும் மழை காலத்தில் நீர் குறைவாகவும், கோடை காலத்தில் அதிகமாகவும் கிடைக்கும் என்றும் ஆதிவாசிகளின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் நல்லதம்பி வேலாயுதம் தெரிவித்தார்.

தேன் எடுப்பதற்காக காட்டு வழியில் செல்லும் போது ஏதும் காயங்கள் ஏற்படும் பட்சத்தில் தண்ணீர் கொடியை வெட்டி இரண்டாக பிளந்து நடுவில் உள்ள கசரை வழித்து காயத்தில் வைப்பார்களாம் இதனால் காயம் இலகுவில் குணமடையும் வாய்ப்பு உள்ளதாகவும், எந்தப் பெரிய காயங்கள் என்றாலும் அந்த கசரை வைத்து கட்டி தண்ணீர் ஊற்றி ஈரமாக வைத்துக் கொண்டிருந்தால் காயம் மிக விரைவில் ஆறிவிடும் என்றும் தெரிவித்தார்.

இவர்கள் மீன் பிடித்து தங்களது உணவுக்காக மீனை நெருப்பில் சுட்டு சோற்றை இலையில் வைத்து சாப்பிடுவதே இவர்களது வழமை. அதுபோன்று சோளனை இடித்து அதில் உணவுகள் செய்வது, தேன் சாப்பிடுவது இவர்களது உணவு முறையாக காணப்படுகின்றது.

ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஆதிவாசிகளின் கலாசாரம் மற்றும் உணவுப் பழக்கம், பேச்சு வழக்கம் உட்பட்ட பல காலத்திற்கேற்ப கல்வி முறை உருவாகிய நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டு காணப்படுவதை இங்கு அவதானிக்க முடிகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான ஆதிவாசிகள் சங்கத்தின் தலைவரான நல்லதம்பி வேலாயுதம் கருத்து தெரிவிக்கும் போது-

மட்டக்களப்பு மாவட்டத்தில் எங்கள் இனத்தவர்கள் குஞ்சங்கல்குளம், மதுரங்கேணிக்குளம், கிருமிச்சை, கொக்குவில், மாங்கேணி, காயான்கேணி, வட்டவான், ஆலங்குளம், நாசிவன்தீவு, குகனேசபுரம், பனிச்சங்கேணி, கண்டலடி, தட்டுமுனை, பால்சேனை, அம்மந்தனாவெளி, திக்காணை கட்டுமுறிவு, ஆண்டான்குளம் போன்ற பகுதிகளில் வாழுகின்றனர். இவை மிகவும் வறுமைப்பட்ட கிராமங்கள்.

எமது கலாசாரங்கள் வளர வேண்டும். இன்று எமது மொழிகள் மாறுபட்டுக் கொண்டு செல்கின்றது. இன்று காலம் போற போக்கில் கால்கள் போய்க் கொண்டிருப்பது போன்று எமது இனத்தில் சில இளைஞர்கள் தடம் மாறியிருக்கின்றார்கள். அதிலும் பல படித்த பட்டதாரிகள் எமது இனத்தை விட்டு மாறியிருக்கின்றார்கள்.

எமது பாரம்பரிய இனத்தை நாம் ஒரு போதும் எதற்காகவும் விற்கக்கூடாது. அதனை நாங்கள் பாதுகாக்க வேண்டும். இதற்காக நாங்கள் எத்தனையோ நிறுவனங்களுடன் கலந்துரையாடியிருக்கின்றோம். நாங்கள் வறுமையில் வாழ்ந்தாலும், எமக்கான ஒரு மொழியுடன் எம்மவர்கள் இன்றும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றார்கள். எமது இளைஞர்களுக்கு எமது மொழியைக் கற்றுக் கொடுப்பதன் மூலம் எமது இனம் வளர்ந்து வரும் என்பதே எமது அவா.

இன்று தம்மானயில் ஒரு பாடசாலையில் எமது இனத்தைச் சேர்ந்த ஒருவரே அதிபராக இருக்கின்றார். அவர் அங்கு எமது மொழியையும் சொல்லிக் கொடுப்பதுடன், சிங்கள மொழியையும் சொல்லிக் கொடுக்கின்றார். அதன் மூலம் எமது மொழி பாதுகாக்கப்படுகின்றது. அதே போன்று இங்கும் அவ்வாறான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே எமது வேண்டுகோள்.

அத்துடன் தம்மானயில் எமது பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் அருங்காட்சியகம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் எமது மாவட்டத்திலும் அருங்காட்சியகம் அமைக்கப்படல் வேண்டும். எமது மூதாதையர்கள் இப்படித்தான் வாழ்ந்தார்கள் என்பதை நாங்கள் அறிவோம் எமது சந்ததியினரும் இதனை அறிய வேண்டும். இந்த வேண்டுகோள் பல காலமாக விடுக்கப்பட்டு வந்தும் இவை நடைமுறைப்படுத்தப்படாமல் இருக்கின்றது.

இலங்கையில் வேடுவ இனம் இருக்கின்றது என்பதை 2008ன் பின்னரே அறியப்பட்டது. அன்றிலிருந்து இந்த விடயங்கள் தொடர்;பில் வேண்டுகோள் விடுத்துக் கொண்டு வருகின்றோம். ஆனால் இன்றுவரை நடைமுறைக்கு வந்ததாக இல்லை. இதனை எமது நாட்டின் கலாச்சார அமைச்சு கருத்திற் கொண்டு எமக்கான அருங்காட்சியகம் ஒன்றை இங்கு அமைத்துத் தருவதற்கு முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.

ஆனால் தற்போது காலத்திற்கேற்ப மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் இவர்களின் பேச்சு வழக்கும் மாற்றம் பெற்று நடைமுறைகளும் மாற்றம் கண்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட ஆதிவாசிகள் சங்கத்தின் தலைவரான நல்லதம்பி வேலாயுதம் தெரிவித்தார்.

வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் வசிக்கும் ஆதிவாசிகள் மிகவும் வறிய நிலையில் வாழ்ந்து வருவதுடன், இவர்களின் நிலமைகள் தொடர்பில் அரசாங்கம் கூடிய கவனம் செலுத்தி எங்களது அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு முன்வருவார்கள் என்ற நம்பிக்கையில் ஆதிவாசிகள் காத்துக் கொண்டிருப்பதை இங்கு சென்றதன் பிற்பாடு எம்மால் அறிந்து கொள்ள முடிந்தது.

எனவே இலங்கை நாட்டின் ஆதிக் குடியான இவர்களின் அடிப்படை வசதிகள் மற்றும் வாழ்வாதார பிரச்சனைகளை தீர்த்து இவர்களுக்கும் ஒரு உன்னதமான சேவையை செய்து வைப்பதற்கு அரசாங்கம் கரிசனை கொள்ள வேண்டும் என்பதே எங்களது அவாவாகவுள்ளது.