Connect with us

இலங்கை செய்திகள்

கனவான் அரசியலை மதிக்காத இலங்கைப் பாராளுமன்றம் கடுமையான அரசியல்வாதிகளை சந்திக்கத் தொடங்கியிருக்கின்றது

Published

on

இலங்கை அரசியல் வரலாற்றில் இலங்கை சுதந்திரத்தின் போது பல கனவான்கள் அரசியலில் இருந்தார்கள். குறிப்பாக சுதந்திர காலப்பகுதியில் இடதுசாரிகள் சார்பாக என்.எம்.பெரேரா, பீற்றர் கெனமன், கொல்வின் ஆர்.டி.சில்வா போன்ற ஆளுமை மிக்க தலைவர்கள் இருந்தார்கள்.

அத்தகைய நிலையில் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் முதலாவது அராசங்கத்தை அமைத்தது. அந்த அரசாங்கம் டி.எஸ்.சேனநாயக்க தலைமையிலான அமைச்சரவையை உருவாக்கியது. அந்த அமைச்சரவையில் ஜீ.ஜீ.பொன்னம்பலம் பிரதான தமிழ் அமைச்சராக இருந்தார். ஜீ.ஜீ.பொன்னம்பலம்  தான் விரும்பு அந்தப் பதவிக்குச் செல்லவில்லை எனவும் டி.எஸ்.சேனநாயக்க அவரை அந்தப் பதவிக்கு அழைத்து வந்ததாகவும் செய்திகள் வந்தன.

அவர் அழைத்து வந்ததற்கான காரணம் ஜீ.ஜீ.ஆளுமை மிக்க தலைவர், ஆங்கிலப்புலமை மிக்கவர், அறிவுக்கூர்மை மிக்கவர் எனவே என்.எம்.பெரேரா, பீற்றர் கெனமன், கொல்வின் ஆர்.டி.சில்வா போன்ற எதிர்த்தரப்பு தலைவர்களுக்கு பதிலளிக்கக்கூடிய தலைவராக ஜீ.ஜீ.இருந்த காரணத்தினால் அவரை அமைச்சரவைக்கு டி.எஸ்.சேனநாயக்க அழைத்து வந்தார்.

அதன் பின்னர் தொடர்ச்சியாக பல்வேறுபட்ட கனவான்கள் இலங்கைப் பாராளுமன்றத்திற்கு வருகை தந்தார்கள். விசேடமாக 77ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்ட தமிழ்ப்பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருமே கனவான்களாக இருந்தார்கள்.

ஒவ்வொருவரிடமும் திறமை இருந்து. இதனால்தான் 77 ஆம் ஆண்டுகாலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் அரசாங்க அதிபராக லயனல் பெர்னாண்டோ அவர்கள் தனது கட்டுரையொன்றில் யாழ்ப்பாண அரசியல்வாதிகள் கனவான்கள் என்றும், யாழ்ப்பாணம் ஏனைய மாவட்டங்களைவிட அபிவிருத்தியில் முன்னிலையாக இருந்த மாவட்டமாகவும் இருந்தது. அந்த நிலை யுத்தத்தின் பின்னர் இல்லாமல் போனது. கொடிய யுத்தம் தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்டது என்றே கூற வேண்டும்.

அந்தக் கொடிய யுத்தத்தின் காரணமாக பொருளாதார முன்னேற்றத்திலும், கல்வி முன்னேற்றத்திலும் ஏனைய துறைகளிலும் முன்னேற்றமடைந்த தமிழர்கள் சீரழியத் தொடங்கினார்கள். ஆயுதப் போராட்டங்கள் வெடித்த நிலைமை காரணமாக தமிழர்கள் சின்னாபின்னமாகினார்கள். பல்வேறு நாடுகளுக்கு ஓடவேண்டிய துர்ப்பாக்கிய நிலை தமிழர்களுக்கு ஏற்பட்டது.

இதனால் தமிழ் அரசியல் என்பதும் மிகவும் மோசமான நிலைக்குச் செல்லத் தொடங்கியது. புத்திஜீவிகள், கனவான்கள் அரசியலுக்குவரப் பயந்தார்கள். அவ்வாறு அரசியலுக்கு வந்தவர்களும் அநியாயமாகப் படுகொலை செய்யப்பட்டார்கள்.

ஆயுதம் தாங்கிய தமிழ் இயக்கங்களும் பல்வேறுபட்ட கொடுமைகளை தமிழ் மக்களுக்கு செய்தன. விசேடமாக புளொட், ரெலோ, ஈபிஆர்எல்எவ் போன்ற அமைப்புக்கள் அந்தக் காலப்பகுதியில் தமிழ் மக்கள் மீது ஆயுதத்துடன் செய்த நடவடிக்கைகளும் தமிழர்களின் இருப்புக்களை மிகமோசமாகப் பாதிக்கச் செய்தது.

குறிப்பாக தமிழ்த்தலைவர்களான ஆலாலசுந்தரம், தர்மலிங்கம், அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், திருமதி யோகேஸ்வரன் போன்ற பல தலைவர்களை இந்த ஆயுதப் போராட்டம் இல்லாமல் செய்தது. இதனால் இலங்கைப் பாராளுமன்றத்தில் தமிழ்பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பாரிய வெற்றிடம் ஒன்று காணப்பட்டது.

சரியான வகையில் கருத்துக்களை முன்வைக்க முடியாத பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரயோசனமற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைப் பாராளுமன்ற ஆசனங்களை வீணடித்துக் கொண்டிருந்தார்கள். குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்புக் கூட அர்த்தமற்ற பாராளுமன்ற உறுப்பினர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பியிருந்தார்கள்.

அண்மைய பாராளுமன்றத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் மக்கள் கூட்டணியின் நீதியரசர் விக்னேஸ்வரன் போன்றோரின் பாராளுமன்ற உரைகள் பாராளுமன்றத்தில் தமிழர்களின் கருத்தியலை ஆணித்தரமாக கூறுவதாக அமைந்திருக்கின்றது. இவர்களின் உரைகளுடன் சுமந்திரனின் நிலையிலும் மாற்றங்கள் தென்படுவது வரவேற்கத்தக்கது.

சாணக்கியனின் உரை என்பது இன்று வைரலாகப் பேசப்படும் விடயமாகும். அனைத்துத் தமிழ் மக்கள் மத்தியிலும் இந்தப் பதினைந்து நிமிட உரை பாரிய மாற்றத்தையும், புத்தெழுச்சியையும் ஏற்படுத்தியிருக்கின்றது. அவ்வாறே கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் உரையும் கடுமையானதாக அமைந்திருக்கின்றது.

சாணக்கியன் மிகவும் சாணக்கியமாக நடைமுறைப் பிரச்சினைகளை பாராமன்றத்தில் உரையாற்றியது மாத்திரமல்ல, இனவாதிகளின் வாய்களை அடக்கக்கூடியதாகவும் சிங்கள அறிவுஜீவிகளை சிந்திக்க வைப்பதாகவும் அமைந்திருந்தது.

இதேசமயம் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் உரை கடுமையானதாகவும், தமிழ் தேசியத்தை வலியுறுத்துவதாகவும் சிங்கள இனவாதிகளுக்கு ஆத்திரமூட்டுவதாகவும், சிங்கள மக்கள் மத்தியில் சற்றுக் கோபத்தினை ஏற்படுத்துவதாக அமைந்திருந்தாலும் அவரது உரை உண்மையான புத்திஜீவிகளை சிந்திக்கவைப்பதாக அது அமைந்திருந்தது.

ஆனால் சாணக்கியனின் உரை சிங்கள பௌத்தர்கள் விடும் தவறுகளை சுட்டிக்காட்டத் தவறவில்லை. தொடர்ந்தும் இவ்வாறான ஆற்றல்மிக்க உரைகள் பாராளுமன்றத்தில் இடம்பெற வேண்டியது மிக மிக அவசியமானதாகும்.

தனியே இந்த உரைகள் அரசியலை மாத்திரம் மையம் கொண்டிருக்காமல் நாட்டின் பொருளாதார வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம், மக்களின் ஆரோக்கியமான வாழ்க்கை முறை என்பவற்றை மேம்படுத்த வேண்டிய வகையில் அமைந்திருக்க வேண்டியது அவசியமானதாகும்.

சாணக்கியன் போன்றோருக்கு இருக்கக்கூடிய சிங்களப் புலமைகளைப் பயன்படுத்தி சிங்களவர்களின் மனங்களை வெல்லக்கூடிய வகையிலும், அவர்களிடம் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய வகையிலும் அவர்களது உரைகள் அமைந்திருக்க வேண்டும்.

காலம் காலமாக தீர்க்கப்படாமல் இருக்கின்ற இந்த இனப்பிரச்சினை தான் இந்த நாட்டின் சாபக்கேடு என்று தொடர்ச்சியாக இந்தப் பாராளுன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் தெரிவித்துக் கொண்டிருக்க வேண்டும்.

இன்று பல்வேறுபட்ட நாடுகளில் பல்வேறுபட்ட பாராளுமன்றங்கள் இருக்கின்றன. அந்தப் பாராளுமன்றத்தில் இடம்பெறுகின்ற உரைகளை இலங்கைப் பாராளுன்றத்தில் இருக்கக்கூடிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கேட்கும்படி செய்ய வேண்டும்.

ஏனெனில் வளர்ச்சியடைந்த நாடுகளில் குறிப்பாக சிங்கப்பூர், ஜப்பான், பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கூட பாராளுமன்றத்தில் இடம்பெறும் உரைகளின் சிறப்பம்சங்களை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அந்த நாட்டின் நிதியமைச்சர்கள் உரையாற்றுவதையும், அந்த நாட்டின் அபிவிருத்தி பற்றிப் பேசுவதையும் அபிவிருத்திக்காக அவர்கள் மேற்கொள்கின்ற நடவடிக்கைகள் பற்றியும், மக்களின் வாழ்வாதாரத்திற்காக மேற்கொள்கின்ற நடவடிக்கைகள் பற்றியும் அந்தந்த அமைச்சர்கள் பாராளுமன்றத்தில் உரையாற்றுகின்ற பொழுது எவ்வளவு அமைதியாக ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் செவிமடுக்கின்றார்கள், அவ்வாறே வாதங்கள் வருகின்றபொழுது எவ்வளவு நாகரிகமாக வாதங்களை நிகழ்த்துகின்றார்கள் என்பதையும் இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தெளிவு படுத்த வேண்டும்.

இலங்கைப் பாராளுமன்றம் என்பது பெருமளவுக்கு கல்வியறிவற்றவர்களால் நிரம்பியிருக்கும் கூடம்என்பது பல்வேறுபட்ட பிரிவினரின் கருத்தாகும். பல்வேறு பட்ட கணிப்பீடுகளின்படி பெருமளவு பாராளுமன்ற உறுப்பினர்கள் க.பொ.த.சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடையாதவர்கள் என்றும், இன்னுமொரு பிரிவின் க.பொ.த.உயர்தரத்தில் சித்தியடையாதவர்கள் என்றும் மிகமிக குறுகிய பகுதியினரே பல்கலைக்கழகப் பட்டங்களைப் பெற்றவர்கள் என்றும் ஒரு கருத்து நிலவுகின்றது.

ஆகவே இவ்வாறானவர்களினால் நிரம்பியிருக்கும் பாராளுமன்றம் சிறப்பாக செயற்படுமென்பது எதிர்பார்க்க முடியாததாகும். அவ்வாறே அமைச்சரவையில் இருக்கக்கூடிய ஒருசில அமைச்சர்கள் கூட  கல்வியறிவு அற்றவர்களாக காணப்படுகின்றார்கள்.

கல்வியறிவு மாத்திரமல்ல மிகுந்த ஆளுமை மிக்க தலைவர்கள் இந்த அமைச்சரவையில் இடம்பெற வேண்டும். ஆனால் நிலைமை அவ்வாறு இருப்பதாகத் தென்படவில்லை.

இந்த நிலைமை தொடருமாக இருந்தால் சாணக்கியன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றோர் குறிப்பிட்டது போன்று இன்னும் 75 வருடங்களுக்கு இந்த இனக்குரோதத்தை தடுத்து நிறுத்த முடியாதது மட்டுமல்ல, இந்த நாடு மேலும் மேலும் குட்டிச் சுவராகி ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகின்ற பொழுது மிகமோசமான நிலைக்குத் தள்ளப்படுவது மாத்திரமல்ல, மோசமான நிலையிலுள்ள நாடுகளின் பட்டியலில் இந்த நாடும் சேர்ந்து கொள்ளும் என்பதில் மாற்றுக்கருத்திற்கிடமில்லை.

பாராளுமன்ற ஜனநாயகம் மதிக்கப்பட்டு, கருத்தியல்வாதிகளின் கருத்துக்கள் மிக அவதானமாகக் கேட்கப்பட்டு அங்கீகரிக்கப்பட வேண்டியதும் அவசியமானதாகக் காணப்படுகின்றது.