Connect with us

இலங்கை

கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் க.சிவநாதன் ஓய்வு

Published

on

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுதாவளைக் கிராமத்தில் கந்தையா பரமேஸ்வரி தம்பதியினருக்கு 1960 ஆம் ஆண்டு மார்கழி 30 ஆம் திகதி பிறந்த கந்தையா சிவநாதன், இலங்கை நிருவாக சேவையின் விசேடதர உத்தியோகத்தராக கடமையாற்றி 2020 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 29 ந் திகதியுடன் ஓய்வு பெற்றுள்ளார்.

இவர் தனது ஆரம்ப காலக் கல்வியை களுதாவளை இராமகிருஷ்ண வித்தியாலயத்திலும் களுதாவளை மகா வித்தியாலயத்திலும் பயின்றதுடன் உயர்தரக் கல்வியை பட்டிருப்பு மகா வித்தியாலயத்திலும் மேற்கொண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வர்த்தக முகாமைத்துவப் பட்டப்படிப்பை நிறைவு செய்து கொண்டதுடன் சமூகவியலில் முதுமானிப்பட்டமும் பெற்றுள்ளார். பின்னர் 1985 ஆம் ஆண்டு தேசிய கடதாசிக் கூட்டுத்தாபனத்தில் சந்தைப்படுத்தல் நிறைவேற்று அதிகாரிப் பயிற்சி பெற்றிருந்தபோது ஆசிரிய சேவையில் இணைந்து மட்டக்களப்பு கன்னன்குடா மகாவித்தியாலயத்திலும் பட்டிருப்பு மகா வித்தியாலயத்திலும் ; ஆசிரியராக கடமையாற்றியிருந்தார். தொடர்ந்து 1991 ஆம் ஆண்டு இலங்கை நிருவாக சேவையில் இணைந்துகொண்டார்.
அதன்போது முதல் நியமனமாக ஏறாவூர் பற்று(செங்கலடி); பிரதேச செயலாளராக கடமையேற்றார். அந்தக் காலகட்டத்தில் நாட்டில் ஏற்பட்ட கலவரங்கள் காரணமாக இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியேற்றும் நடவடிக்கைகளை திறம்படச் செய்தார்.

1992 ஆம் ஆண்டு தொடக்கம் 2000 ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் மண்முனை தென்மேற்குப் பிரதேச செயலாளராகப் பதவியாற்றினார். அப்பிரதேசத்தில் அப்போதிருந்த சூழ்நிலை மற்றும் போக்குவரத்து வசதியின்மை காணப்பட்ட போதும் மக்களது அன்றாட வாழ்வின் அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டதுடன் பல வருடங்களாக நடைபெறாமலிருந்த பாரம்பரிய கலாசார நிகழ்வான கொம்புமுறி விளையாட்டு நிகழ்வை நடாத்தியதன் மூலம்; இளைய தலைமுறையினருக்கு தமது பாரம்பரிய நிகழ்வுகள் பற்றிய அறிதலை ஏற்படுத்தியிருந்தார்.

2000 ஆண்டு தொடக்கம் 2004 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் மண்முனைப் பற்றுப் பிரதேச செயலாளராக கடமை புரிந்தார்.

2005 தொடக்கம் 2009 வரையான காலப்பகுதியில் மாவட்ட புனர்வாழ்வு புனரமைப்பு அலுவலகத்தில் திட்டப்பணிப்பாளராக கடமை புரிந்தார். அந்தக் காலகட்டத்தில் ஏற்பட்ட யுத்த நிலைமை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்தும் திருகோணமலை மாவட்டத்திலிருந்தும் இடம்பெயர்ந்த மக்களுக்கு உரிய வசதிகளை மேற்கொள்வதில் குறித்த நிறுவனங்களுடன் இணைந்து திறம்படச் செயற்பட்டார். அத்துடன் அவர்களை மீளக்குடியேற்றுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன்; கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கை தொடர்பில் மாவட்டத்திற்குப் பொறுப்பாகவிருந்து தனது கடமைகளை நிறைவேற்றினார்.


2009 ஆம் ஆண்டு தொடக்கம், மட்டக்களப்பு மாநகர ஆணையாளராக பதவியேற்றிருந்தார். அப்போது இவருடைய முயற்சியினால் மகாத்மா காந்திப்பூங்கா, நீருற்றுப் பூங்கா, லீனியர் பூங்கா போன்றவை அமைக்கப்பட்டன.

மாநகர சபைக்கு நீண்டகால அபிவிருத்தி திட்டமொன்று இல்லாத சந்தர்ப்பத்தில் இருபத்தைந்து வருடங்களுக்கான நகருக்குரிய பிரதான அபிவிருத்தித் திட்டம் நகர அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து இவரால் தயாரிக்கப்பட்டது. இத்திட்டமானது அனர்த்த இடர் குறைப்பு மற்றும் தயார் நிலைத்திட்டத்துடன் இணைந்ததாக தயாரிக்கப்பட்டது. அத்துடன் நகரத்திற்குரிய வடிகாலமைப்புத் திட்டம் புறநகும திட்டத்தின் உதவியுடன்   தயாரிக்கப்பட்டது. இதே திட்டத்தின் கீழ் மாநகரத்திற்குரிய சந்தைக் கட்டிடத் தொகுதியும் அமைக்கப்பட்டது.

சிவநாதன், மாநகர ஆணையாளராக கடமையாற்றிய போது ஆதனவரிப் பிரிவு மற்றும் நானாவித வருமான வரிப் பிரிவு ஆகியவை கணணி மயப்படுத்தப்பட்டன. இதன் மூலம் மக்களுக்குரிய சேவைகள் இலகுவாக்கப்பட்டன. மாநகர சபைக்குரிய மக்கள் குறைகேள் செயற்றிட்டம் சிறப்பாகச் செயற்படுத்தப்பட்டது. இத்திட்டத்தை உலக வங்கி மற்றும் அப்போதைய பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் பார்வையிட்டு இதனை ஏனைய உள்ளுராட்சி சபைகளும் நடைமுறைப்படுத்த உலக வங்கியின் உதவியுடனான புறநகும திட்டத்தினால் பணிக்கப்பட்டது. இத்திட்டத்திற்காக க.சிவநாதன், கிழக்கு மாகாண உள்ளுராட்சித் திணைக்களத்தினால் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் மாகாணசபை உள்ளுராட்சி அமைச்சினால் சிறந்த முகாமைத்துவத்திற்கான ஸ்வர்ண பிரதீப உயரிய விருதும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். இதற்கு மேலதிகமாக 2013 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண சபையினால் சிறந்த உற்பத்தித்திறனுக்கான விருதும் மட்டக்களப்பு மாநகர சபைக்கு வழங்கப்பட்டது.


மேலும் காலநிலை மாற்றம் தொடர்பான செயற்றிட்டத்தில் மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் அநுசரணையுடன் சிவநாதனால் முன்வைக்கப்பட்ட மாணவர்களுக்கான போட்டி நிகழ்வுகளின் போது மாணவர்களிடமிருந்து சிறந்த ஆக்கங்கள் வெளிக்காட்டப்பட்டதுடன் அவர்கள் சர்வதேச போட்டிகளில் பங்கு பற்றியதுடன் மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை மாணவர்கள் சுவீடன் நாட்டிற்கு சென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளராக 2014 ஆம் ஆண்டு கடமையாற்றியதுடன் 2015 ஆம் ஆண்டு தொடக்கம் தற்போது வரை ஆறு வருடங்கள் கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளராக கடமையாற்றிக் கொண்டிருந்த போது விவசாய ஊக்குவிப்பு நடவடிக்கையாக மாகாணத்தில் பல்வேறு விவசாயக் கண்காட்சிகளை வெற்றிகரமாக நடாத்தினார். கரடியனாறு விவசாய சேவைப் பயிற்சி நிலையத்தை அபிவிருத்தி செய்வதில் முன்னின்று  ; செயற்பட்டார்.

அமைச்சின் செயலாளரா கடமையாற்றிக்கொண்டிருந்த போது தனது நிருவாகத் திறமையினால் வினைத்திறன்மிக்க சேவையை ஆற்றியிருந்தார். பாராளுமன்றப் பொதுக் கணக்குக் குழுவினால் 2016,2017, 2018 என தொடர்ந்து மூன்று வருடங்களாக விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்ட பெருமைக்குரிய க.சிவநாதன், இலங்கை அரச நிருவாக சேவையின் விசேட தர சிறந்த ஒரு அதிகாரி.

-பா.மோகனதாஸ்-
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *