Connect with us

இலங்கை

கைவிடப்பட்ட சோளன் – விவசாயிகள் கவலை

Published

on

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான தொழில்களின் ஒன்றான விவசாய செய்கைகள் ஆரம்பிக்கப்பட்டு நெற் செய்கை மற்றும் தோட்ட செய்கைகள் என்பன இடம்பெற்று வருகின்றது.

அந்த வகையில் தோட்டச் செய்கைகளில் சோளம், கச்சான், மரவள்ளி உட்பட்ட பல தோட்ட செய்கைகள் பயிரிடப்பட்டு காணப்படுகின்றது. அதிலும் சோளம் செய்கையானது இக்கால பகுதியில் முக்கிய இடம் வகிக்கும் செய்கையாகும்.

இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை செய்கை செய்யப்பட்டுள்ள சோளன் பயிர்களில் சுமார் 738 கெக்டேயர் நிலப்பரப்பில் படைப்புழுத் தாக்கத்தின் பரவல் அதிகரித்து காணப்படுகின்றது. இதனால் சோளம் செய்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் இம்முறை செய்கை செய்யப்பட்டுள்ள சோளன் பயிர்களில் பெரும்பாலான சோளன் படைப்புழுத் தாக்கத்தின் பரவல் காரணமாக முற்றுமுழுதாக அழிவடைந்த நிலையில் உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

அதிலும் குறிப்பாக மதுரங்கேணிக்குளம், குஞ்சன்குளம், கிரிமிச்சை, மாங்கேணி உட்பட்ட பல பிரதேசங்களின் தற்போது சோளம் செய்கை பண்ணப்பட்டு வந்த நிலையில் சோளம் குடலைப்பருவமாக வரும் போதே படைப்புழுக்களின் தாக்கம் ஆரம்பித்து காணப்படுகின்றது.

குறித்த பிரதேச மக்களின் ஜீவனோபாய தொழிலில் ஒன்றாக விவசாய செய்கை முக்கிய பங்கு வகிக்கின்றது. அதிலும் சோளம் செய்கை மூலம் இவர்கள் தங்களது வாழ்நாள் உணவுத் தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்கு உதவியாக உள்ளது.

அத்தோடு சோளம் குலைகள் சிலவற்றினை படைப்புழுக்கள் அழித்து வெறும் சோளம் நெட்டிகள் மாத்திரம் சில சோளம் செய்கை தோட்டங்களில் காணப்படுகின்றது. இந்த வியடம் தொடர்பாக எந்தவித அதிகாரிகளும் வருகை தரவில்லை என்று மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கடந்த வருடம் முதல் ஆரம்பித்த படைப்புழுக்களின் தாக்கம் தொடர்ச்சியாக இம்முறையும் ஏற்பட்டுள்ளது. கடந்த முறை அனுபவித்த நஷ்டத்தினை இம்முறை பூர்த்தி செய்யலாம் என்ற எண்ணத்தில் மக்கள் சோளம் செய்கையில் ஈடுபட்ட நிலையில் மீண்டும் படைப்புழுக்களின் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

 எனவே தொடர்ச்சியாக படைப்புழுக்களின் தாக்கம் ஏற்பட்டு வரும் பட்சத்தில் பாதிக்கப்படும் எங்களுக்கு உரிய நஷ்ட ஈட்டினை வழங்குமாறு கோருவதுடன், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தங்களது பகுதிகளுக்கு இதுவரையும் வருகை தரவில்லை என்று மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

அத்தோடு தேர்தல் காலங்களில் பல கட்சிகளில் இருந்து போலியான வாக்குறுதிகளை சுமந்து கொண்டு எமது பகுதிகளுக்கு வரும் அரசியல்வாதிகள் தேர்தல் முடிந்ததும் பின்னர் எமது பகுதிகள் என்ன நிலையில் உள்ளது என்று பார்ப்பதற்கு யாரும் வருகை தருவதில்லை. நாங்கள் உயிரோடு உள்ளளோமா அல்லது இருக்கின்றோமா என்று யாரும் கவனிப்பதில்லை. அதிலும் அரச உயர் அதிகாரிகள் இது தொடர்பில் கவனம் செலுத்துவதில்லை.

 அத்தோடு குறிப்பாக ஆதிவாசிகளின் பிரதேசமான குஞ்சன்குளம் பிரதேசத்தில் வாழும் ஆதிவாசிகளின் தங்களது பண்டைய காலத்து உணவுகளில் சோளம் முக்கிய இடம்பெற்று வரும் நிலையில் இவர்கள் சோளனை இடித்து தங்களுக்கு உணவாக உட்கொண்டு வரும் நிலையில் இவ்வாறு சோளம் தொடர்ச்சியாக அழிந்து வருவதால் ஆதிவாசிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் நிலைமையும் கவலைக்கிடமாகவே காட்சியளிக்கின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை செய்கை பண்ணப்பட்டுள்ள சோளன் பயிர்களில் சுமார் 738 கெக்டேயர் நிலப்பரப்பில் படைப்புழுத் தாக்கத்தின் பரவல் காணப்படுவதாகவும், அதனைக்கட்டுப்படுத்த விவசாயத்திணைக்களம் களத்தில் நின்று துரித நடவடிக்கையெடுத்து வருவதாகவும் மாவட்ட விவசாய விரிவாக்கல் திணைக்களப் பிரதிப்பணிப்பாளர் வீ.பேரின்பராஜா தெரிவித்தார்.

இம்முறை பெரும்போக விவசாயத்தின் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் 1,500 ஹெக்டேயர் நிலப்பரப்பில் சோளன் பயிர்ச்செய்கை மேற்கொள்வதற்கான இலக்கைக் கொண்டு விவசாய நவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

கடந்த டிசம்பர் 15 வரையான காலப்பகுதியில் 1,214 ஹெக்டேயர் சோளன் விவசாயிகளால் செய்கை பண்ணப்பட்டுள்ளது. இவற்றில் சுமார் 738 ஹெக்டேயர் நிலப்பரப்பில் படைப்புழுத்தாக்கத்திற்கான பரவல்கள் அவதானிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 40 தொடக்கம் 61 வீதமான தாக்கங்கள் இலைகளிலும், பூக்களிலும் அவதானிக்கப்பட்டுள்ளன.

இவற்றைக் கட்டுபடுத்துவதற்கான ஒருங்கிணைந்த பீடை முகாமைத்துவத் திட்டம், இயற்கை முறை மற்றும் இரசாயன கிருமி நாசினி விசிறல் போன்ற அனைத்து நடவடிக்கைகளையும் விவசாய விரிவாக்கல் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது.

மேலும், விவசாயத் திணைக்களத்தினால் இந்நோயினைக் கட்டுப்படுத்துவதற்காக வைரஸ் ஒன்று அறிமுகம்; செய்யப்பட்டுள்ளது. இது பௌலிஜன் எனும் திரவ மருந்தாகும். இதனை நோய்த்தாக்கமுள்ள பயிர்களில் புழுக்களில் படும்படியாக விசிறப்படும் போது நோயினை முற்றாகக் கட்டுப்படுத்த முடியும்.

இது தவிர இந்நோய்த் தாக்கத்தினை ஆய்வு செய்து முற்றாகக் கட்டுப்படுத்த கிழக்குப் பல்கலைக்கழக பூச்சியியலாளர் டாக்டர் நிரஞ்சனா, கிளிநொச்சி பிராந்திய விவசாய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலைய பூச்சியியலாளர் டாக்டர் அரசசேகரி, பத்தளகொட நெல் ஆராச்சி நிலைய பூச்சியியலாளர் டாக்டர் சொர்னா ஆகியோர் தலைமையில் மூன்று விசேட குழுக்கள் தாளயடிவட்டை, புல்லுமலை, கடடியனாறு ஆகிய பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டனர்.

இதன்போது விவசாய விரிவாக்கல் திணைக்களப் பிரதிப்பணிப்பாளர், உதவி விவசாயப் பணிப்பாளர்கள்,  பாடவிதான உத்தியோகத்தர்கள், விவசாய போதனாசிரியர்கள், தொழிநுட்ப உத்தியோகத்தர்களுக்கு நோயத்தாக்கத்தினைக் கட்டுப்படுத்தும் விதம் தொடர்பாகவும், விவசாயிகளுக்கு விழிப்பூட்டல் செய்து கட்டுப்பாட்டு செயன்முறைகளைக் கற்றுக் கொடுக்கும் பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக விவசாயிகளுக்கான அறிவூட்டல்கள் வழங்கல், செயன்முறைப்பயிற்சி வழங்கல், கள விஜயங்கள், துண்டுப்பிரசுரங்கள் வழங்குதல், ஒலிபெருக்கி மூலம் அறிவூட்டல் போன்ற நடவடிக்கைகள் எமது உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இப்படைப்புளு தாக்கமானது இளம் பருவப் பயிர்களுக்கு அதிகமாகக் காணப்படுவதுடன், முதிர் பருவப் பயிர்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது என்று தெரிவித்தார். எனவே சோளன் செய்கை மூலம் பாதிக்கப்பட்ட மக்களின் நிலமையினை கருத்தில் கொண்டு உரிய அரச அதிகாரிகள் நேரடியாக விஜயம் மேற்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்ட ஈட்டினை வழங்குவதுடன், குறித்த படைப்புளு தாக்கத்தினை கட்டுப்படுத்தும் வகையில் மக்களுக்கு உதவிகளை வழங்க முன்வருமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.