Connect with us

சர்வதேசம்

பதவி நீக்க தீர்மானம் செல்லாது!

Published

on

‘டொனால்டு டிரம்ப், அமெரிக்க அதிபராக இல்லாத சூழலில், அவர் மீதான பதவி நீக்க தீர்மானம், சட்டப்படி செல்லாது,” என, டிரம்பின் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிபர் தேர்தலில், ஜோ பைடன் வெற்றி பெற்றதை உறுதி செய்வதற்கான கூட்டம், கடந்த ஜன.,6ல், அமெரிக்க பார்லி.,யில் நடைபெற்றது.

நிறைவேற்றம் : அப்போது, டிரம்ப் ஆதரவாளர்கள், பார்லி., கட்டடத்தில் ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்து, வன்முறையில் ஈடுபட்டனர். இந்த சம்பவம், அமெரிக்க வரலாற்றில், ஒரு கரும்புள்ளியாககருதப்படுகிறது. இதற்கு, டிரம்ப் தன் ஆதரவாளர்களிடம், வன்முறையை துாண்டும் வகையில் பேசியதுதான் காரணம் என, ஜனநாயக கட்சி குற்றஞ்சாட்டியது. இதையடுத்து, அக்கட்சி, பிரதிநிதிகள் சபையில், டிரம்ப் மீது, பதவி நீக்க தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியது.

இந்த தீர்மானம், அடுத்த வாரம், ‘செனட்’ சபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். இச்சபையில், ஆளும் ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சிக்கு, தலா, 50 உறுப்பினர்கள் உள்ளனர். குறைந்தபட்சம், குடியரசு கட்சி உறுப்பினர்கள்,17 பேரின் ஆதரவு இருந்தால் தான், பதவி நீக்க தீர்மானத்தை நிறைவேற்ற முடியும். அவ்வாறு நிறைவேறினால், டிரம்ப் இனி அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது.

இந்நிலையில், பதவி நீக்க தீர்மானத்தை தயாரித்த, ஜனநாயக கட்சி பிரதிநிதிகள் குழு, டிரம்ப் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக, 80 பக்க அறிக்கையை, அவையில் தாக்கல் செய்தனர்.

அப்போது நடந்த விவாதத்தில், டிரம்ப் வழக்கறிஞர்கள் கூறியதாவது: ‘அமெரிக்க மக்கள் அனைவரையும் காப்பேன்’ என, டிரம்ப் எடுத்துக்கொண்ட பதவிப் பிரமாணத்தை மீறி, அவர் வன்முறையை துாண்டினார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. டிரம்ப், தற்போது அதிபராக இல்லை என்பதால், அவரை பதவியில் இருந்து நீக்கும் பேச்சுக்கே இடமில்லை. எனவே, அது தொடர்பான தீர்மானம், அரசியல் சாசன சட்டப்படி செல்லாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஏற்கனவே, உக்ரைன் அரசுக்கு நெருக்கடி கொடுத்த பிரச்னையில், டிரம்ப் மீது, 2019ல், பதவி நீக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *