Connect with us

சர்வதேசம்

ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கொந்தளிப்பு

Published

on

மியான்மரில், ஆட்சியை ராணுவம் கைப்பற்றியதை கண்டித்து, ஏராளமானோர், கார்களில் ஒலி எழுப்பியும், மேளம் அடித்தும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

மியான்மரில், கடந்த ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில், ஆங் சன் சூச்சி தலைமையிலான, ஜனநாயக தேசிய லீக் கட்சி பெருவாரியான இடங்களை கைப்பற்றி, ஆட்சியை தக்கவைத்தது. குற்றச்சாட்டுஇந்த தேர்தலில், தில்லுமுல்லு செய்து வெற்றி பெற்றதாக, ஆளுங் கட்சி மீது, ராணுவம் குற்றம் சாட்டியது.

இதையடுத்து, சில தினங்களுக்கு முன், ராணுவம், திடீரென புரட்சி நடத்தி, ஆட்சியைக் கைப்பற்றி, அவசர நிலையை பிரகடனப்படுத்தியது. ஆங் சன் சூச்சி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், ராணுவ ஆட்சிக்கு எதிராக, மக்கள் போர்க்கொடி துாக்கியுள்ளனர். யாங்கூன் நகர் மற்றும் சுற்றுப் பகுதிகளில் ஏராளமானோர் கார்களில் ஒலி எழுப்பி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். பலர், ஆளும் ராணுவ ஆட்சிக்கு சாவுமணி அடிக்கும் விதமாக, மேளம், தாரை, தப்பட்டை அடித்து, கோபத்தை வெளிப்படுத்தினர். இன்னும் சிலர், ‘ஆங் சன் சூச்சி உடல் நலத்துடன் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்’ என, கோஷமிட்டனர்.

பல ஆண்டுகாலம் ராணுவ ஆட்சியில் இருந்த மியான்மரில், மக்கள் முதன் முறையாக பொது இடத்தில் தங்கள் கொந்தளிப்பையும், ஆதரவையும் வெளிப்படுத்தியிருப்பது, இதுவே முதன் முறை.

மியான்மரில், மேளம் அடித்தால், தீய சக்திகள் ஓடிவிடும் என்ற நம்பிக்கை உள்ளது. அதன்படி, தீய சக்தியான, ராணுவத்தை விரட்ட, மேளம் அடிப்பதாக, ஒருவர் தெரிவித்தார். ஜனநாயகத்தை ஆதரிக்கும் பல அமைப்புகள், ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, இரவு 8:00 மணிக்கு மக்கள் வீடுகளில் பலத்த கோஷம் எழுப்ப வேண்டும் என, கேட்டுக்கொண்டன.

ஆங் சன் சூச்சிக்கு நெருக்கமான மூத்த அரசியல் தலைவர், வின் ஹெடின், ”ராணுவ ஆட்சியின் உத்தரவுக்கு கீழ்பணிய வேண்டாம்,” என, மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கிடையே, அரசு விடுதியில் சிறை வைக்கப்பட்டிருந்த, அனைத்து கட்சி எம்.பி.,க்களை, ராணுவம்விடுவித்தது.

மியான்மரில், ராணுவ தலைமை தளபதி, மின் அங் ஹலங், ஓராண்டு ஆட்சியை நடத்திச் செல்வார் என, அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், முன்னாள் மற்றும் தற்போதைய ராணுவ அதிகாரிகள் அடங்கிய அமைச்சரவையும் அமைக்கப்பட்டுள்ளது.

மியான்மரில், ஆட்சியை கைப்பற்றிய பின், ராணுவ அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம், தலைமை தளபதி, மின் அங் ஹலங் தலைமையில் நடைபெற்றது. அப்போது, ”கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் நடைபெற்ற மோசடிகள் குறித்து விசாரிக்க, விசாரணை கமிஷன் அமைக்கப்படும்,” என, அவர் அறிவித்தார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *