Connect with us

இலங்கை

வலஹந்துவ தோட்டப்பிரிவில் நன்கொடையாக 50 வீடுகள் நிர்மாணிப்பு

Published

on

இந்திய வீடமைப்பு திட்டத்தின் ஓர் அங்கமாக காலி, வலஹந்துவ தோட்டப்பிரிவில் நன்கொடையாக 50 வீடுகளை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே (மெய்நிகர் மார்க்கம் மூலமாக), தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் பெருந்தோட்டத்துறை அமைச்சர் டாக்டர் ரமேஷ் பத்திரன ஆகியோரால் நேற்று (15) நாட்டப்பட்டது.

விசேட வீடியோ செய்தி ஒன்றினூடாக உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே இந்த நிகழ்வில் உரை நிகழ்த்தியிருந்தார். தற்போதைய சவால்மிக்க காலப்பகுதியில் தனது ஆளுமைக்கு உட்பட்ட வகையில் இலங்கைக்கு தேவையான ஆதரவினை இந்தியா தொடர்ந்து வழங்குமென அவர் இங்கு குறிப்பிட்டிருந்தார்.

சுகாதாரம் மற்றும் நீர், திறன் அபிவிருத்தி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் விவசாயம் உள்ளிட்ட இலங்கை அரசாங்கத்தினால் முன்னுரிமை வழங்கப்படும் துறைகளில் கவனம் செலுத்தி ஒட்டுமொத்த சமூக பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்துவதற்கு இலங்கைக்கு ஆதரவு வழங்க இந்தியா திடசங்கற்பம் பூண்டிருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்திய பிரதமர் ஶ்ரீ நரேந்திர மோடி அவர்களால் உறுதியளிக்கப்பட்டமைக்கு அமைவாக பெருந்தோட்ட பகுதிகளில் பத்தாயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் பணிகளின் புதிய கட்டமானது 2021 ஆம் ஆண்டு ஆரம்பமாகுமென உயர் ஸ்தானிகர் தெரிவித்தார்.

இந்தத் திட்டமானது மறைந்த அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் அவர்களின் நோக்கிற்கு அமைவாக ஒத்துழைப்புக்கான புதிய பரிணாமத்தில் விரைவில் ஆரம்பமாகும்.

270 மில்லியன் அமெரிக்க டொலர் மொத்த ஒதுக்கீட்டின் கீழ் இலங்கையில் 50,000 வீடுகளை நிர்மாணிக்கும் முன்மாதிரி இந்திய வீடமைப்பு திட்டத்தின் கீழ் காலியின் வலஹந்துவ தோட்டப் பிரிவில் குறித்த இந்திய வீடமைப்பு திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இலங்கையின் மத்திய, ஊவா, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலுள்ள பெருந்தோட்ட பகுதிகளில் 4 ஆயிரம் வீடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

பெருந்தோட்ட சமூகத்திற்காக அமைக்கப்படும் இரண்டு அறைகளை கொண்ட இப்புதிய 50 வீடுகள் உரிமையாளர் தெரிவின்கீழ் நிர்மாணிக்கப்படவுள்ளன. அத்துடன் இலங்கை அரசின், தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் ஆலோசனையின் கீழ் இந்தத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து இந்தியாவால் முன்னெடுக்கப்படும் மக்களை இலக்காகக் கொண்ட அபிவிருத்தி ஒத்துழைப்பு பங்குடைமை திட்டங்களின் ஒரு பகுதியாகவே இந்த திட்டம் அமைந்துள்ளது. இதுவரை இந்திய அரசாங்கம் இலங்கைக்கான அபிவிருத்தி உதவிகளுக்காக 3.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியிருக்கும் நிலையில் இதில் 560 மில்லியன் அமெரிக்க டொலர் முற்றுமுழுதான நன்கொடையாக வழங்கப்பட்டது.